ஆப்நகரம்

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை... ஐடி நிறுவனத்துக்கு எச்சரிக்கை!

ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்தாலும், அவர்களை வேலையிலிருந்து நீக்கினாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெக் மகிந்த்ரா நிறுவனத்தை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 12 May 2020, 2:47 pm
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படக்கூடாது எனவும், ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும், கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில், லாபத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் டெக் மகிந்த்ரா நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil புனே டெக் மகிந்த்ரா


இவ்விவகாரம் தொடர்பாக தொழிலாளர் ஆணையர் அலுவலகம் டெக் மகிந்த்ரா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல கடந்த மாதம் விப்ரோ நிறுவனத்தின் மீது எழுந்த புகாரில், அந்நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஐடி ஊழியர்களின் நலனுக்காக இயங்கி வரும் தேசிய ஐடி ஊழியர் செனட் (NITES), புனேவிலுள்ள டெக் மகிந்த்ரா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்புகார்களின் அடிப்படையில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை தேசிய ஐடி ஊழியர் செனட் நாடியுள்ளது. இந்த புகார் கடிதத்தில், “மே 6ஆம் தேதியன்று டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும் ஷிஃப்ட் கொடுப்பனவு (shift allowance) மே 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டெக் மகிந்த்ராவின் 13,000 ஊழியர்களுக்கான ஊதியம் குறைந்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உத்தரவுகளை, விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் டெக் மகிந்த்ரா நிறுவனம் மீறியுள்ளது. ஆகவே இந்நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து டெக் மகிந்த்ராவுக்கு தொழிலாளர் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், மார்ச் 31ஆம் தேதியன்று மகாராஷ்டிர அரசு போட்ட தீர்மானத்தை படித்து, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஊதியம் வழங்கப்பட்ட பின்னர் தொழிலாளர் ஆணையர் அலுவகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கக்கூடாது எனவும், அவர்களது சம்பளத்தை குறைக்கக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்