ஆப்நகரம்

பெண்களின் திருமண உதவித் தொகை உயர்வு.. முதல்வர் மாஸ் அறிவிப்பு!

பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 51,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக மத்தியப் பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 20 May 2023, 12:18 pm
முதலமைச்சர் கன்யா திருமணத் திட்டத்தின் கீழ் ஏழை மகள்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொகை 49,000 ரூபாயில் இருந்து 51,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சோன்காச் நகரில் நேற்றைய முன் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின் போது சிவராஜ் சிங் சவுகான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Samayam Tamil marriage scheme


இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மேலும் கூறுகையில், பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சமூகத்தில் மகள்களுக்கு (பெண் குழந்தைகளுக்கு) இழைக்கப்படும் அநீதியை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ’முக்ய மந்திரி கன்யா விவாஹ் யோஜனா’ திட்டத்தின் கீழ் சமூகத்தின் ஏழைப் பிரிவைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு இனி ரூ. 51,000 வழங்கப்படும்” என்றார்.

மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அரசின் லட்சிய திட்டமான 'லட்லி பஹ்னா யோஜனா' திட்டத்தின் கீழ் ஜூன் 10 முதல் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 டெபாசிட் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

லட்லி லக்‌ஷ்மி யோஜனா!

தனது அரசாங்கத்தின் முக்கிய திட்டமான 'லட்லி லக்‌ஷ்மி யோஜனா' திட்டத்தைக் குறிப்பிட்டு, 44.90 லட்சம் மகள்கள் இந்தத் திட்டத்தின் மூலம் லட்சாதிபதி ஆகியுள்ளனர் என்று கூறினார். இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது ரூ.1.18 லட்சம் செலுத்துவதாக உறுதியளிக்கும் சான்றிதழும், அந்தப் பெண் குழந்தை 21 வயது வரை பல்வேறு நிலை கல்வியை முடித்த பிறகும் நிதியுதவி வழங்கப்படும்.

லட்லி லக்‌ஷ்மி திட்டம் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் கோவா ஆகிய 6 மாநிலங்கள் இத்திட்டத்தைப் பின்பற்றிவருகின்றன.

பெண்களுக்கு அதிகாரம்!

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும், ஆசிரியர் மற்றும் காவலர் பணி நியமனத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை தனது அரசு வழங்கியுள்ளது என்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சொத்துப் பதிவுக்கு செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணத்திலும் விலக்கு அளித்துள்ளோம் என்றார். ஒவ்வொரு பெண்ணும் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதே தனது அரசின் முயற்சி என்றும் முதல்வர் சவுகான் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்