ஆப்நகரம்

காணாமல் போன டிக்டாக்... பயனாளிகள் கவலை!

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஐஓஎஸ் தளங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Jun 2020, 3:08 pm
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை எல்லையைத் தாண்டி உள்நாட்டில் பூகம்பமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. சீன ராணுவத்தினரின் எல்லைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் சீனப் பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிப்பது மற்றும் இறக்குமதி விதிமுறைகளைக் கடுமையாக்குவது போன்ற திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் சீனாவைச் சேர்ந்த மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
Samayam Tamil tiktok ban


டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது அதன் பயனாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நலன் கருதி அரசின் இந்த நடவடிக்கையை ஒரு தரப்பினர் வரவேற்றாலும் மற்றொரு தரப்பினர் இச்செயலி தடை விதிக்கப்படுவதற்கு அதிருப்தி தெரிவிக்கின்றனர். உலகளவில் இந்தியாவில்தான் டிக்டாக் செயலி அதிகப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. நேற்றைய தடை அறிவிப்பைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் தளங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை: நகை வாங்குற ஐடியா இருந்தா விட்ருங்க...

ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் மட்டும் பயன்பாட்டில் இருக்கின்றன. விரைவில் அனைத்து மொபைல் போன்களில் இருந்தும் டிக்டாக் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த தடை அறிவிப்பைத் தொடர்ந்து சீனாவில் இந்திய இணையதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, இந்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும், அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் சீனா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜோ லிஜியான் கூறியுள்ளார்.

‘எங்களுக்கே தடையா?’ இந்திய தளங்களை முடக்கிய சீனா!

இந்தியாவில் கோடிக் கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்து வரும் டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசிடம் இதுகுறித்து அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்டாக் பயன்படுத்துவதற்காகவே புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் அளவுக்கு அதிகப் பயனாளர்களை இந்தியாவில் கொண்டுள்ள அந்நிறுவனத்துக்கு இந்தத் தடை அறிவிப்பால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்