ஆப்நகரம்

சரக்குப் போக்குவரத்தைத் தடுக்கக் கூடாது: அரசு உத்தரவு!

சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான பயணத்திற்கு எவ்வித் தடையும் விதிக்கக் கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 22 Aug 2020, 10:39 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படியும், பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முடக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இருந்தும் பல்வேறு இடங்களில் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சரக்குப் போக்குவரத்துச் சேவையிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
Samayam Tamil transport


இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு உள்ளும் சரக்குகள் மற்றும் சேவைகள் பயணத்துக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சரக்குப் போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகங்கள் அல்லது மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிப்பது பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மீறும் செயல் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலிவு விலையில் வீடு... மக்களே உஷார்!

பல்வேறு மாவட்டங்களில் சரக்குப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதால் மாநிலங்களுக்கு இடையில் சரக்குகள் கொண்டு செல்லுவது மற்றும் சேவைகள் வழங்குவதில் தடங்கல்கள் ஏற்பட்டு விநியோகச் சங்கிலித் தொடர் பாதிக்கப்படுவதாகவும், அதனால் பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் அல்லது மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிப்பது, பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மீறும் செயலாக இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இனிவரும் நாட்களில் பொது மக்கள் மற்றும் சரக்குகள் போக்குவரத்திற்கு மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்கு உள்ளும் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்