ஆப்நகரம்

உபேர் டாக்ஸி: வேலையை இழந்த இந்தியர்கள்!

செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் சர்வதேச அளவில் 350 பேரின் வேலையைப் பறித்துள்ளது உபேர் நிறுவனம்.

Samayam Tamil 16 Oct 2019, 6:44 pm
செலவைக் குறைக்கும் நோக்கத்தில் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் உபேர் நிறுவனம் இந்தியாவில் 10 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
Samayam Tamil உபேர் டாக்ஸி_ வேலையை இழந்த இந்தியர்கள்


அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான உபேர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. உபேர் ஈட்ஸ் என்ற பெயரில் உணவு விநியோகச் சேவையிலும் உபேர் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் தனது செலவுகளைக் குறைத்து வருவாயை உயர்த்தும் முனைப்பில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

உபேர் டாக்ஸி நிறுவனத்தில் மொத்தம் 360 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இந்தியாவில் மட்டும் 10 சதவிகிதப் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். பணிநீக்கம் குறித்து, வருத்தம் தெரிவித்துள்ள உபேர் தலைமை செயலதிகாரி டாரா கோஷ்ரோஷகி, இப்போது உள்ளது போன்ற மிகக் கடினமான நாள் இனி திரும்பவும் வரவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூலை மாதத்தில் சர்வதேச அளவில் 400 பேரை வேலையை விட்டுத் தூக்கிய உபேர், செப்டம்பர் மாதத்தில் 435 பேரைப் பணிநீக்கம் செய்தது. உற்பத்தி மற்றும் பொறியியல் பிரிவில்தான் பெரும்பாலானோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது மூன்றாவது முறையாகப் பணிநீக்க நடவடிக்கையில் உபேர் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பணிநீக்க நடவடிக்கையால் இங்கு அந்நிறுவனத்தின் தொழில் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. டாக்ஸி சேவையில் ஓலா நிறுவனம் கடும் போட்டியாக இருக்கும் நிலையில் உபேருக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல, ஸ்விக்கி போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் உபேர் ஈட்ஸ் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உபேர் நிறுவனத்துக்கு 5.2 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே உபேர் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்