ஆப்நகரம்

கோதுமை ஏற்றுமதி தடை.. ஒரே ஒரு கண்டீஷன்.. பியூஷ் கோயல் சொன்னது இதுதான்!

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க முடியாது என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 May 2022, 3:27 pm
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஏற்பட்டதால் கோதுமை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகரித்தன. இதனால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதியும் உயர்ந்தது.
Samayam Tamil wheat


எனினும், தீவிர வெப்ப அலையால் இந்தியாவின் கோதுமை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டிலேயே கோதுமை விலை கடகடவென உயர்ந்தது. மேலும் கோதுமை தட்டுப்பாடு ஏற்படுமோ எனவும் அச்சம் ஏற்பட்டது. இந்தியாவில் கோதுமை பிரதான உணவாக உள்ளது.

இதையடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மே 14ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இதனால் சர்வதேச சந்தையில் கோதுமை விலை உயர்ந்தது. கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் நிலைமை மேலும் மோசமடையும் எனவும், தடையை நீக்குவதற்கு இந்தியா பரிசீலிக்க வேண்டுமெனவும் சில நாடுகள் வலியுறுத்தின.

வாகனம் வாங்குவோருக்கு செலவு அதிகம்.. மத்திய அரசு உத்தரவு!
இந்நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக ரத்து செய்ய எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். எனினும், மற்ற அரசுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு ஏற்ப கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பியூஷ் கோயல் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் பேசியபோது, “தற்போது உலகளவில் நிலையின்மை உள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினால் கள்ளச் சந்தையில் கோதுமையை பதுக்குவோருக்கு சாதகமாக அமைந்துவிடும்.

இதனால் ஏழை நாடுகளுக்கும் உதவி கிடைக்காது. எனவே அரசு - அரசு வழி ஒப்பந்தங்களே சரியான பாதை. இதன்படி, மிக ஏழையான நாடுகளுக்கு மலிவு விலையில் கோதுமை வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்