ஆப்நகரம்

ஏடிஎம் பிரச்சினை: பணம் வரலனா என்ன பண்றது?

வங்கி உங்களுக்கு இழப்பீடு வழங்கும் தெரியுமா?

Samayam Tamil 8 Oct 2020, 3:51 pm
ஏடிஎம் இயந்திரத்தில் நீங்கள் பணம் எடுக்கும்போது, உங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் போய்விட்டது, ஆனால் உங்கள் கையில் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது? இது தொடர்பான சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கியே விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil what will you do if money stuck in atm machine here is important things to know
ஏடிஎம் பிரச்சினை: பணம் வரலனா என்ன பண்றது?


மாட்டிக்கொள்ளும் பணம்!

இக்கட்டான நேரங்களில் உங்களது பணத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏடிஎம் மையத்துக்குப் பணம் எடுக்கச் சென்றிருப்பீர்கள். ஆனால் அந்த நேரம் பார்த்து ஏடிஎம்மில் பணம் வராது. இயந்திரத்தில் பணம் காலியாகிவிட்டாலோ அல்லது பணம் நிரப்பப்படாமல் இருந்தாலோ நமக்குப் பிரச்சினை இல்லை. வேறொரு ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பணம் வெளியே வராமல் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது? வேறு சில காரணங்களுக்காகவும் பணம் வராமல் போகலாம். ஏடிஎம் எந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் உங்களது பணம் வராமல் போகலாம். ஆனால் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து அந்தப் பணம் போயிருக்கும். இதுபோன்ற சூழல்களில் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்குக் குழப்பமாக இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் விளக்கம்!

உங்களது ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்ட பணத்தை உங்கள் வங்கி மாற்றவில்லை என்றாலோ நீங்கள் அதற்குக் கவலைப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அந்தப் பணம் உங்களுக்குத் திருப்பி வரும் வரை அதற்கான இழப்பீட்டுத் தொகையும் உங்களுக்குக் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தரப்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் தொடர்பான கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில்' (Frequently asked questions) பதிலளித்துள்ளது.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது!

>> இதுபோன்ற தோல்வியுற்ற பரிவர்த்தனைகளுக்கான பணத்தை வங்கிகள் தாங்களே வாடிக்கையாளர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

>> இதுபோன்ற சந்தப்பங்களில் நீங்கள் உங்களுக்கு ஏடிஎம் வழங்கிய வங்கியிலோ அல்லது சம்பந்தப்பட்ட ஏடிஎம் இருக்கும் வங்கியிடமோ உடனடியாகப் புகார் கொடுக்க வேண்டும்.

>> உங்களது ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றால் அந்த நாளிலிருந்து 5 வேலை நாட்களுக்குள் உங்களது பணத்தைச் சம்பந்தப்பட்ட வங்கி திரும்பச் செலுத்த வேண்டும்.

>> 5 நாட்களுக்கு மேல் தாமதம் ஆனால் எத்தனை நாள் தாமதம் ஆகிறதோ அத்தனை நாட்களுக்கும் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் வங்கிகள் உங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

>> வங்கியிடமிருந்து பதில் கிடைத்த 30 நாட்களுக்குள் அல்லது பதில் கிடைக்காத நிலையில் நீங்கள் வங்கி அமைப்புக்கான புலனாய்வு அதிகாரியிடம் (Ombudsman) புகார் தெரிவிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்