ஆப்நகரம்

கோதுமை விலை படு மோசமாக உயர்வு.. இதென்னடா சப்பாத்திக்கு வந்த சோதனை!

கடந்த ஒரு ஆண்டில் கோதுமையின் விலை சுமார் 23 விழுக்காடு உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 Dec 2022, 12:37 pm
இந்தியர்களின் பிரதான உணவு தானியங்களில் கோதுமை முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் கோதுமை அதிகளவில் நுகரப்படுகிறது. எனவே, கோதுமை விலை ஏற்ற இறக்கங்கள் விலைவாசியில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
Samayam Tamil wheat
wheat


இந்நிலையில், கடந்த ஒரே ஆண்டில் கோதுமை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள தகவல் வாயிலாக தெரிகிறது. அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்தாண்டு நவம்பர் மாதம் வரை கோதுமை விலை சுமார் 23% உயர்ந்துள்ளதாக அரசின் தகவல்படி தெரிகிறது.

மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அகில இந்திய அளவில் கோதுமையின் சராசரி மொத்த விற்பனை விலை குவிண்டாலுக்கு 2,212 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில் அகில இந்திய அளவில் கோதுமையின் சராசரி மொத்த விற்பனை விலை குவிண்டாலுக்கு 2,721 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவின் கோதுமை உற்பத்தி லேசாக குறைந்துள்ளது. 2021ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 109.59 மில்லியன் டன்னாக இருந்தது. பின்னர் 2022ஆம் நிதியாண்டில் கோதுமை உற்பத்தி 106.84 மில்லியன் டன்னாக குறைந்துவிட்டது.

50 நகரங்களில் 5G சேவை வந்துருச்சு.. உங்க ஊரில் இருக்கா?
இதுமட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் கோதுமை விளைச்சல் 2021ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 3,521 கிலோவில் இருந்து 2022ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 3507 கிலோவாக குறைந்துள்ளது.

இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முக்கிய கோதுமை உற்பத்தியாளர்களாக இருக்கின்றன. இந்த மாநிலங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடுமையான வெப்ப அலை தாக்கியது. இதனால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டது.

நடப்பு குறுவை சாகுபடி பருவத்தில் கோதுமை கொள்முதல் 187.92 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் தகவல்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2015 ரூபாயாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்