ஆப்நகரம்

வீட்டுக் கடன் வாங்கியோருக்கு நிவாரணம் கிடைக்குமா? RBI என்ன செய்யப்போகிறது?

வீட்டுக் கடன் EMI செலுத்துவோருக்கு நாளை ரிசர்வ் வங்கி நிவாரணம் தருமா?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 Feb 2023, 4:07 pm
ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு (RBI MPC) கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அவ்வகையில், நேற்று (பிப்ரவரி 6) ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டம் நாளை (பிப் 8) முடிவடைய இருக்கிறது.
Samayam Tamil Home loan
Home loan


ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தின் முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் வாங்கியோர், குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கியவர்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்ட அறிவிப்புகளுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

ஏப்ரல் மாதம் வரை 4% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் கடந்த டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து உயர்த்தப்பட்டு இப்போது 6.25% ஆக உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான EMI தொகையும் உயர்ந்துள்ளது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.88% ஆகவும், டிசம்பர் மாதத்தில் 5.72% ஆகவும் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் பணவீக்க வரம்புக்குள் (6%) சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதால், இந்த முறை ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வட்டி உயர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த முறை இறுதியாக ரிசர்வ் வங்கி வட்டியை 0.25% உயர்த்திவிட்டு அத்துடன் நிறுத்திவிடும் என்பதே பெரும்பாலான நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனினும், தற்போதைய சூழலை வைத்து பார்க்கும்போது இந்த முறை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தாது என எதிர்பார்ப்பதாக SBI Research தெரிவித்துள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளதால் வளர்ச்சி இலக்குகளை நோக்கி பயணிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தாது என எதிர்பார்ப்பதாக மற்றொரு தரப்பு நிபுணர்களும் கூறுகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்