ஆப்நகரம்

என்னுடைய கடனை வாங்கி கொரோனாவுக்கு செலவிடுங்கள்: விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் வாங்கிய 100 சதவீத கடன் பாக்கியையும் திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2020, 3:30 pm
இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அதைத் திரும்பச் செலுத்தாமல் கடந்த 2016ஆம் ஆண்டு மாா்ச் 2ம் தேதி நாட்டை விட்டே தப்பியோடினார். பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வந்த கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் மீது நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள இவரை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil மல்லையா


முதலில் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்த மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான நெருக்கடி ஏற்பட்டவுடன் தனது கடன் பாக்கி முழுவதையும் திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார். 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதலே கடனைச் செலுத்தத் தயாராக இருப்பதாகக் கூறி வருகிறார். ஆனால் அவரது பேச்சை அமலாக்கத் துறையினர் கேட்பதாக இல்லை. மல்லையாவுக்குச் சொந்தமாக இந்தியாவில் உள்ள சொத்துகளை விற்பனை செய்து கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

உலகப் பொருளதாரச் சரிவிலிருந்து இந்தியா தப்புமா?

இந்நிலையில், தற்போது கொரோனா பீதி உச்சத்தில் இருக்கும் சமயத்தில், தனது கடனை வசூலித்து கொரோனா நிவாரணத்துக்குப் பயன்படுத்தும்படி விஜய் மல்லையா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கடன் பாக்கியைத் திருப்பிச் செலுத்தத் தான் தயாராக இருப்பதாகவும், வங்கிகளும் அமலாக்கத் துறைனயிரும் தனது கோரிக்கையை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு விலை கொடுத்த அம்பானி!

மேலும், கொரோனா பீதியில் வாடும் இந்தியாவில் தனது கடன் தொகையைக் கொண்டு நிவாரண உதவிகளை மேற்கொள்ளலாம் எனவும், நிதியமைச்சர் இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு அறிவிப்பால் தனது அனைத்து நிறுவனங்களும் முடங்கிவிட்டதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விரைவில் மீளவேண்டும் எனவும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்