ஆப்நகரம்

நீங்களும் பெட்ரோல் பம்ப் திறக்கலாம்.. பல லட்சம் சம்பாதிக்கலாம்!

உங்க ஊர்லயே பெட்ரோல் பம்ப் திறந்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம். அது எப்படி, அதற்கு என்னென்ன தேவை என்று இங்கே பார்க்கலாம்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 11 May 2023, 2:30 pm
இந்தியாவில் பெட்ரோல் பம்ப் திறந்து தொழில் செய்வது என்பது, சில்லறை எரிபொருள் துறையில் முதலீடு செய்ய விரும்பும் தனிநபர்களுக்கு லாபகரமான தொழில் வாய்ப்பாக இருக்கும். இருப்பினும், இதற்கு குறிப்பிடத்தக்க நிதி முதலீடு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் தொழில் அறிவு தேவை. பெட்ரோல் பம்ப் திறக்க நிறைய செலவாகும். அதற்கும் நிறைய தகுதி இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவில் புதிதாக ஒரு பெட்ரோல் பம்ப் திறக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil petrol pump



பெட்ரோல் நிலையம்!

இந்தியாவில் பெட்ரோல் பம்ப் திறப்பதற்கான தகுதி அளவுகோலின் கீழ், விண்ணப்பதாரரின் வயது குறைந்தது 21 ஆண்டுகளாக இருக்க வேண்டும். இதனுடன், விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சில்லறை விற்பனை நிலையம், வணிகம் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறையை நடத்துவதில் குறைந்தது 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், விண்ணப்பதாரரின் சொத்து மதிப்பும் பரிசீலிக்கப்படும். அத்துடன் விண்ணப்பதாரருக்கு எந்த குற்றப் பதிவும் இருக்கக்கூடாது. வேறு எந்த வணிகக் கடனும் அவருக்குஇருக்கக்கூடாது.

நிலம் முக்கியம்!

பெட்ரோல் பம்ப் அமைக்க நிலம் முதலில் முக்கியம். அந்த நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். மேலும் அது எந்தச் சட்டப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஒரு பெட்ரோல் பம்ப் திறக்க, ஒரு விநியோக அலகுக்கு (யூனிட்) 800 சதுர மீட்டர் நிலமும், இரண்டு விநியோக அலகுகளுக்கு 1200 சதுர மீட்டர் நிலமும் தேவை.

நகரங்களில் பெட்ரோல் பம்ப்!

மறுபுறம், நகர்ப்புறங்களில் ஒரு பெட்ரோல் பம்ப் திறக்க ஒரு விநியோக அலகுக்கு 500 சதுர மீட்டர் நிலமும், இரண்டு விநியோக அலகுகளுக்கு 800 சதுர மீட்டர் நிலமும் தேவை. இது தவிர, தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பம்ப் திறக்க, ஒரு யூனிட்டுக்கு 1200 சதுர மீட்டர் நிலமும், இரண்டு யூனிட்டுக்கு 2000 சதுர மீட்டர் நிலமும் தேவை.

முதலீடு எவ்வளவு?

இந்தியாவில் பெட்ரோல் பம்ப் திறக்க தேவையான முதலீடு நிலத்தின் விலை, கட்டுமான செலவு, உபகரணங்கள் செலவு மற்றும் உரிம கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்துள்ளது.

நிலம்: நிலத்தின் விலை இடம் மற்றும் தேவையான நிலத்தின் அளவைப் பொறுத்தது. நிலத்தின் விலை ரூ. 20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும்.

கட்டுமானம்: கட்டுமான செலவு வடிவமைப்பு, பயன்படுத்தப்படும் பொருள் மற்றும் பெட்ரோல் பம்பின் அளவைப் பொறுத்தது. கட்டுமான செலவு ரூ. 30 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கலாம்.

உபகரணங்கள்: எரிபொருள் விநியோக அலகுகள், சேமிப்பு தொட்டி மற்றும் பெட்ரோல் பம்பை இயக்கத் தேவையான பிற உபகரணங்களின் விலை ஆகியவை உபகரணச் செலவில் அடங்கும். இதற்கான செலவு ரூ. 20 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை இருக்கும்.

உரிமம்: உரிமக் கட்டணம் அரசு அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் அனுமதி, உரிமம் மற்றும் ஒப்புதல்களைப் பெறுவதற்கான செலவை உள்ளடக்கியது. உரிமக் கட்டணம் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்