ஆப்நகரம்

வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

ஜூலை 31 வரை வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 24 Jun 2020, 9:43 pm
நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாக இருப்பதாலும், நாட்டு மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும் வருமான வரி, ஜிஎஸ்டி, மின் கட்டணம், வாகன வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்திருந்தது. ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2018-19ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30ஆம் தேதிக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil tax filing


அதேபோல, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதியும் ஜூன் 30ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. வாகன வரி செலுத்தும் கால அவகாசத்தையும் ஜூன் 30 வரை நீட்டித்து அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் நீடிக்கும் சூழலில் வரி செலுத்துவோருக்கு ஏதுவாக வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2018-19ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் நிறுவனங்கள்... காரணம் இதுதான்!

அதேபோல, 2019-20ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரி செலுத்துவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கும் தொழில் துறையினருக்கும் இதுபோன்ற சலுகைகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்