ஆப்நகரம்

சர்பிரைஸ்.. ஜெட் வேகத்தில் உயரும் கிளாண்ட் பார்மா பங்குகள்.. காரணம் என்ன?

கிளாண்ட் பார்மா நிறுவனத்தை விற்பனை செய்ய ஃபோசன் குழுமம் திட்டமிட்டுள்ளதால் பங்கு விலை ஏற்றம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 29 Nov 2022, 4:22 pm
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிளாண்ட் பார்மா (Gland Pharma) நிறுவனம் சீனாவை சேர்ந்த ஃபோசன் பார்மாசிட்டிகல் குரூப் (Fosun Pharmaceutical Group) குழுமத்துக்கு சொந்தமானதாகும். இந்நிலையில், கிளாண்ட் பார்மா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு ஃபோசன் பார்மா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil gland pharma
gland pharma


மேலும், கிளாண்ட் பார்மா நிறுவனத்தை வாங்குவதற்கு பல தரப்புகளில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சீனாவை சேர்ந்த ஃபோசன் பார்மா குழுமம் ஷாங்காய் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இது ஃபோசன் இண்டர்நேஷனல் (Fosun International) என்ற மிகப்பெரிய குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது.

ஃபோசன் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர் சீனாவை சேர்ந்த பெரும் தொழிலதிபர் குவோ குவாங்சாங். இவர் தற்போது கிளாண்ட் பார்மா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில், கிளாண்ட் பார்மாவை வாங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் காட்டுகிறார்களாம். எனவே, கிளாண்ட் பார்மாவை விற்பனை செய்வது குறித்து ஆலோசகர் ஒருவரிடம் ஃபோசன் குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

செபி தடை ஓவர்.. NDTV பங்குகளை கைப்பற்றிய அதானி
தற்போதைய சூழலில் கிளாண்ட் பார்மா நிறுவனத்தின் தொழில் நிலவரம் குறித்து அதை வாங்க முயற்சிக்கும் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

எனினும், கிளாண்ட் பார்மா நிறுவனத்தை விற்பனை செய்ய ஃபோசன் குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இன்று கிளாண்ட் பார்மா பங்கு விலை கிட்டத்தட்ட 8% உயர்ந்து 1880.30 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் கிளாண்ட் பார்மா பங்குவிலை சுமார் 50% சரிந்துள்ள நிலையில் இன்று பங்கு விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், ஹாங் காங் பங்குச் சந்தையில் ஃபோசன் பார்மா பங்கு விலை 5.4% உயர்ந்துள்ளது.

கிளாண்ட் பார்மா நிறுவனம் ஆண்டிபயாட்டிக், கார்டியாலஜி, ஆன்காலஜி போன்ற சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள், ஊசிகளை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது. சுமார் 60 நாடுகளில் கிளாண்ட் பார்மா இயங்கி வருகிறது.

கிளாண்ட் பார்மாவை மட்டுமல்லாமல் வேறு சில சொத்துகளை விற்பனை செய்வதற்கும் ஃபோசன் இண்டர்நேஷனல் குழுமம் திட்டமிட்டு வருகிறது. ரிசார்ட் நிறுவனமான கிளப் மெட் மற்றும் சில உணவு மற்றும் பானம் சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட சொத்துகளை விற்பனை செய்ய ஃபோசன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டில் ஃபோசன் குழுமம் 110 கோடி டாலர் கொடுத்து கிளாண்ட் பார்மா நிறுவனத்தின் 74% பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்