ஆப்நகரம்

விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் சலுகை!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தமிழக பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 19 Mar 2022, 6:16 pm
2022-23 நிதியாண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்திருந்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை இன்று தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிறைய அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. குறிப்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
Samayam Tamil FPO


தமிழகத்தின் குறு, சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் விளைவித்த பொருட்களைச் சந்தைப்படுத்தி உரிய விலை பெறும் வகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு உருவாக்கி வருவதாகவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் சார்ந்த சிறு, குறு தொழில்களைத் தொடங்குவதற்கும் பெருமளவு ஊக்குவிக்கப்படுவதாகவும் தமிழக வேளாண் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

நடப்பு ஆண்டு முதல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் வழங்கப்படும் முதலீட்டு மானியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் எனவும், இத்திட்டத்தின்கீழ், வேளாண் தொழிலுக்கான எந்திரங்கள், தளவாடங்கள் மீதான முதலீட்டிற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலை இனி உயராது.. தமிழக அரசு நடவடிக்கை!
’வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர் தொகுப்புகள், சமுதாய பண்ணைப் பள்ளிகள் ஆகியவற்றை அமைக்க ரூ.30.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரியல் இடுபொருள் தயாரிப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவை ஊக்குவிக்கப்படுவதோடு சமுதாய வளப் பணியாளருக்காக பாரம்பரிய கால்நடை மருத்துவம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.42.7 கோடி செலவிடப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்