ஆப்நகரம்

TNEA: பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!

இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககம் இன்று வெளியிடுகிறது. இதையடுத்து இன்ஜினியரிங் அட்மிஷன் தொடங்குகிறது.

Samayam Tamil 20 Jun 2019, 1:06 pm
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இதனை tneaonline.in என்ற இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil tnea.


தமிழகத்தில் 539 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ, பி.டெக் படிப்புகளில் ஏறதாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு மே 2ம் தேதி தொடங்கியது. 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. சுமார் 1.33 லட்சம் பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் tneaonline.in என்ற இணையதள பக்கத்தில் இன்று வெளியிடப்படுகிறது. முன்னதாக கடந்த 17ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், வெளிவரவில்லை. அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தரவரிசைப் பட்டியல் 20ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளிவரவில்லை. tneaonline.in இணையதள பக்கம் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. எனவே, இன்று மாலைக்குள் ரேங்க் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள், புகார்கள் இருந்தால் மாணவர்கள் 044-22351014, 22351015 என்ற உதவி எண் மூலம் அவற்றை தெரியப்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 4 நாட்கள் அவகாசமும் வழங்கப்படுகிறது. பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியானதும், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம், கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் குறித்த விபரங்கள் அந்தந்த கல்லூரிகளின் வழிகாட்டுதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி