ஆப்நகரம்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் பெயர்களை விளம்பர நோக்கில் பயன்படுத்தக்கூடாது- தொடரும் உத்தரவு

அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கில் பள்ளிகள் பயன்படுத்தக்கூடாது என்கிற பள்ளி கல்வித்துறையின் எச்சரிக்கை இந்தாண்டும் தொடர்கிறது.

Samayam Tamil 19 Apr 2019, 5:42 pm
இன்று வெளியிடப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் பெயரை விளம்பர நோக்கில் பள்ளி நிர்வாகம் பயன்படுத்தக்கூடாது என பள்ளிகல்விதுறை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil விளம்பர நோக்கில் பள்ளி நிர்வாகங்கள் செயல்படக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை
விளம்பர நோக்கில் பள்ளி நிர்வாகங்கள் செயல்படக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியாகின. மாணவர்களை விட மாணவிகள் 5.07% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 73 ஆயிரத்து 287 பேர் தோல்வியடைந்துள்ளனர். இவற்றில் மாணவர்கள் 44 ஆயிரத்து 472 பேர், மாணவிகள் 28 ஆயிரத்து 815 பேர் ஆவர்.

கடந்த 2016ம் ஆண்டு வரை, பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவிகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு விளம்பரப்படுத்துவது வழக்கம்.

ஆனால் இதற்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறை தடை விதித்தது. உத்தரவை மீறி பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரிக்கை விடுத்திருந்தது. அதே உத்தரவு இந்தாண்டும் தொடர்கிறது.

பள்ளி நிர்வாகங்கள் தங்களது வருமானத்தையும், பிரபலத்தையும் பெருக்கிக்கொள்ள விளம்பர நோக்கில் செயல்படுவதால் மாணவர்களிடம் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக முதன் கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார்.

எனினும், அரசாணையின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இதேபோல செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார் கிடைத்து வருகிறது.

அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளை வெளியிடுதல், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்தி போன்றவை மாணவர்களின் நலனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதனால் இவ்வாறான செயலில் ஈடுபடுதல் குறித்து எல்லா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு தக்க அறிவுரைகளை வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடவடிக்கை குறித்து அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி