ஆப்நகரம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் இர்ஃபான் நீதிமன்றத்தில் சரண்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில், மாணவர் இர்ஃபான் இன்று சேலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 9ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Samayam Tamil 1 Oct 2019, 6:53 pm
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில், மாணவர் இர்ஃபான் இன்று சேலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 9ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Samayam Tamil Dharmapuri NEET impersonation Mohammed Irfan


அண்மையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மற்ற மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் சேர்ந்துள்ளனரா என்று மாநிலம் முழுவதும் அதிரடி விசாரணை நடைபெற்றது.

அதன் அடிப்படையில், தருமபுரியில் முகமது இர்ஃபான் என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் இர்ஃபானை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால், மாணவர் இர்ஃபான் காணவில்லை. அவர் மொரிசியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில், நீட் தேர்வில் இர்ஃபான் ஆள்மாறாட்டம் செய்வதற்கு மூளையாக செயல்பட்ட, அவருடைய தந்தை சபீயை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை மாணவர் இர்ஃபானை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். பின்பு, இன்று மதியம் சேலம் நடுவர் நீதிமன்றத்தில் மாணவர் இர்ஃபான் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், வரும் 9ம் தேதி வரையில், இர்ஃபானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து மாணவர் இர்ஃபானை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி