ஆப்நகரம்

கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TNN 25 Sep 2016, 12:08 am
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil school education department orders school teachers and education officers
கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: மழைக் காலங்களில் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறைகளை யாரும் பயன்படுத்தாத வகையில் பூட்டி வைக்க வேண்டும். பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, கசிவு ஏதும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கோளாறுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர் தேங்கக் கூடிய பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தால் அவற்றை முறையாக மூடி வைக்க வேண்டும்.

மாணவர்கள் விடுமுறை நாள்களில் ஏரி, குளம், ஆறுகளில் குளிப்பதைத் தவிர்க்கவும், ஏரிகளில் உடைப்பு ஏற்படும் நேரங்களில் வேடிக்கை பார்க்கச் செல்லக் கூடாது என்றும் அறிவுரை வழங்க வேண்டும். வெள்ளப்பெருக்கு சமயங்களில் ஆற்றைக் கடக்கக் கூடாது. பள்ளியை விட்டுச் செல்லும்போது பழுதடைந்து, அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடக் கூடாது, இடி-மின்னல் நேரங்களில் மரத்தின் அடியில் ஒதுங்கக் கூடாது. சாலைகளில் மழைநீர் கால்வாய் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.

மின் சாதனங்களை இயக்கக் கூடாது, பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணி, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி