ஆப்நகரம்

இந்திய மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கை- முதல்வர் அறிவிப்பு

இந்திய மருத்துவ துறை சார்ந்த படிப்புகளுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Jul 2018, 4:25 pm
இந்திய மருத்துவ துறை சார்ந்த படிப்புகளுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Samayam Tamil edapadi-k-palanisamy-cover-pic
சித்தா, அயுர்வேதா படிப்புகளுக்கு +2 மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கை


நீட் நுழைவுத் தேர்வு மூலம் இந்திய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதன்படி சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், மத்திய அரசு கடந்த இரண்டு கல்வியாண்டுகளிலும் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு நீட் தேர்வை பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மாநில அரசின் கொள்கை ரீதியான எதிர்ப்பையும் மீறி, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006-ன் பிரிவுகளுக்கு முரணாக, நீட் தேர்வை இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு
அறிமுகப்படுத்த முடியாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்பொழுதுள்ள இந்திய மருத்துவ முறை மத்திய குழு சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையும் கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி கல்லூரிகளில், +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே
மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

என்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர் பெருமக்களும் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி