ஆப்நகரம்

TN By Elections: இதுதான் காரணமா? இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஓரங்கட்டப்பட்ட விஜயகாந்த் மகன்!

வரும் இடைத்தேர்தலை ஒட்டி, பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று விஜய பிரபாகரனுக்கு அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 May 2019, 2:05 pm
கடந்த மாதம் 18ஆம் தேதி, தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
Samayam Tamil Vijaya Prabhakaran


இந்நிலையில் இடைத்தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் அதிமுக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் மினி சட்டமன்ற தேர்தல் என்ற வகையில், 22 தொகுதி இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையொட்டி தொகுதி வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, பிரச்சாரத்தையும், பணப் பட்டுவாடாவையும் மும்முரமாக அதிமுக தலைமை செயல்படுத்தி வருகிறது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தென்பட்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பார்க்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்கையில், அவரது பிரச்சாரத்தை அதிமுக தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இடைத்தேர்தல் வெற்றி மிகவும் முக்கியம் என்பதால், இதில் தேவையின்றி ஏதாவது பேசி, வேறு சர்ச்சைகளுக்கு இட்டு விடக் கூடாது என்று அதிமுக கருதுகிறது.

அதேசமயம் விஜய பிரபாகரனுக்கு பிரச்சார அனுமதி கொடுக்காததால், விஜயகாந்த் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரேமலதா மட்டும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் தேறி வருவதால், வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்.

அடுத்த செய்தி