ஆப்நகரம்

ஹலோ பாஜக! என்ன இது “நமோ டிவி”? - தேர்தல் ஆணையத்தை நாடிய ஆம் ஆத்மி!

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, நமோ டிவி தொடங்க எப்படி அனுமதி தரப்பட்டது என்று ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Apr 2019, 3:39 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி, அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
Samayam Tamil AAP vs BJP


இந்நிலையில் பாஜக சார்பில் “நமோ டிவி” என்ற 24 மணி நேர தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த ஆம் ஆத்மி கட்சி, உடனே தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.

அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, புதிதாக தொலைக்காட்சி தொடங்க ஒரு கட்சிக்கு எப்படி அனுமதிக்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி, அரசியல் கட்சிகள் இடையே சலுகைகள் வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டக் கூடாது. அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகள், கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் தான் பணம், அதிகாரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, அரசியல் கட்சிகள் பொதுமக்களை நாடி வாக்குகளைப் பெற முயற்சிக்கும். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, பாஜக 24 மணி நேர “நமோ டிவி” என்ற தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது.

அவர்களிடம் பணம் இருக்கிறது. அதனால் சொந்தமாக தொலைக்காட்சியை தொடங்குகின்றனர். ஆனால் இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை யார் கண்காணிப்பார்கள்? ஊடகச் சான்றிதழ் குழுவினரை பாஜக தொடர்பு கொண்டு, உரிய சான்று பெற்றுள்ளதா?

அவ்வாறு இல்லையெனில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஏன் நோட்டீஸ் அளிக்கப்படவில்லை? என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஒருவேளை தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு உரிய அனுமதி வழங்கவில்லை எனில், அக்கட்சிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி