ஆப்நகரம்

அதிமுக வேட்பாளர் பட்டியல் செல்லாது? ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு ஆப்பு வைக்கும் கே. சி. பழனிசாமி!

பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேட்புமனுவில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். போட்ட கையெழுத்து செல்லாது என்றால் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் செல்லாததாக ஆகிவிடும்.

Samayam Tamil 18 Mar 2019, 6:11 pm
ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்ட கையெழுத்துக்கு எதிராக முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முக்கியத் தீர்ப்பு வழங்க உள்ளது.
Samayam Tamil epsops1


தமிழகத்தில் மக்களவை தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஒரே நாளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளன. இத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட 1700-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்தனர்.

அப்போது முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி. பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தன் மனுவில், “அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது. எனவே, வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மார்ச் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர். இதனிடையே, தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குவதால் தனது வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கே.சி. பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.


அவரது கோரிக்கையை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேட்புமனுவில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். போட்ட கையெழுத்து செல்லாது என்றால் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் செல்லாததாக ஆகிவிடும். இதனால் நாளை டெல்லி உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு அதிமுகவின் தேர்தல் வியூகத்தில் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி