ஆப்நகரம்

திமுகவா? அதிமுகவா? யாருக்கு விழப் போகிறது 4.14 லட்சம் தபால் ஓட்டுகள்!

வரும் மக்களவை தேர்தலில் பதிவாகவுள்ள தபால் ஓட்டுகளை பெற, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

Samayam Tamil 25 Mar 2019, 11:01 am
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. நாளையுடன் மனுதாக்கல் நிறைவு பெறுகிறது.
Samayam Tamil Postal Votes


இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணியில் 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு 3 கட்டங்களாக தேர்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவற்றை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவர்களும் தபால் மூலம் வாக்களிக்க இருக்கின்றனர். எனவே இந்த தேர்தலில் மொத்தம் 4.14 லட்சம் பேர் தபால் ஓட்டு போடவுள்ளனர்.

இந்த வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகையால் தபால் ஓட்டுகளை பெற திமுக, அதிமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற மறுத்துவிட்டது. இதனால் அவர்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ளதால், தபால் ஓட்டுகள் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.

மேலும் தபால் ஓட்டுகள் போடவுள்ள நபர்களை சந்தித்து, திமுக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அதிமுக, தபால் ஓட்டு போடும் வாக்காளர்களின் பெயர் பட்டியலை பெற்றுள்ளது. அவர்களை தங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி