ஆப்நகரம்

வேலூர் மக்களவைத் தோ்தலில் அமமுக போட்டியிடாது – டிடிவி தினகரன்

ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று தெரிவித்துள்ளாா்.

Samayam Tamil 8 Jul 2019, 12:03 pm
அமமுகவை கட்சியாக பதிவு செய்து, நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தோ்தலில் போட்டியிடுவோம், அதுவரை தோ்தலில் போட்டி இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran 1200


ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது அமமுகவை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நாங்குநேரி உள்பட இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும், ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாக இருக்கலாம். எனவே கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது” என முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

ஏற்கனவே ஆா்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட பின்னா், மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பரிசுப் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டது அமமுகவுக்கு பின்னடைவாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி