ஆப்நகரம்

தைரியமிருக்கா? ஈபிஎஸ், ஓபிஎஸ் வீட்டில் ஐடி ரெய்டு விடுவீர்களா? சவால் விட்ட அழகிரி!

தமிழக முதல்வர் பழனிச்சாமி வீட்டிலோ, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலோ வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவீர்களா என்று கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 2 Apr 2019, 7:48 pm
விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாக்குச் சேகரித்தார்.
Samayam Tamil KS Alagiri.


எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாரதிய ஜனதாவும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் ஒரு சர்வாதிகார போக்கில் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு திராவிட முன்னேற்ற கழக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலே நடத்தப்பட்ட சோதனை என்பது தேர்தலை அடிப்படையாக கொண்டு எங்களுடைய வெற்றியை பாதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக.

நான் வருமான வரித்துறையை, தேர்தல் ஆணையத்தை கேட்க விரும்புகிறேன். நீங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை சோதனையிட முடியுமா? மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் வீட்டை சோதனையிட முடியுமா?

நான் சொல்லுகிறேன். அவர்கள் வீட்டிலேயே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் இருக்கிறது. இந்த தேர்தலே பணத்தின் அடிப்படையில் தான். அவர்கள் நடத்துகிறார்கள். அதேபோல பாரதிய ஜனதா தலைவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. அங்கெல்லாம் செல்லாத வருமான வரித்துறை துரைமுருகன் வீட்டிற்கு வருகிறது.

ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகனுக்கு ஆரத்தி எடுத்தால், 500 ரூபாய் போடுகிறார். எனவே அவருக்கு ஆரத்தி எடுப்பதற்காக கிலோமீட்டர் கணக்கில் மக்கள் இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது. இன்றைக்கு ஐநூறு ரூபாயை அவரால் போட முடிகிறது என்று சொன்னால் எப்படி இது சாத்தியம். தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது.

இந்த தேர்தலை பலாத்காரத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என்கிற அடிப்படையில் சர்வாதிகார அடிப்படையில் பாரதிய ஜனதாவும், அண்ணா திமுகவும் செயல்படுகிறார்கள். மக்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்று கூறினார்.

அடுத்த செய்தி