ஆப்நகரம்

அதிமுகவில் இருந்து இவர்கள் இருவரும் இனி மத்திய அமைச்சரா? செம கடுப்பில் பாமக!

தமிழகத்தில் இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பாஜக மேலிட வட்டாரங்கள் கூறுகின்றன.

Samayam Tamil 29 May 2019, 10:56 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் 350 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. வட இந்திய மாநிலங்களில் பாஜகவிற்கு அதிக ஆதரவு இருந்தாலும், தென்னிந்தியாவில் போதிய ஆதரவு இல்லை. தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது.
Samayam Tamil ADMK Office


தேனி மக்களவை தொகுதியில் மட்டும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதனைக் கருத்தில் கொண்டு, தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்று ஓபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கி, தனக்கு வழங்கப்படாமல் போனால் அதிமுகவை இரண்டாக, மூன்றாக உடைத்து விடுவேன் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வைத்தியலிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜெயலலிதாவின் தீவிர விஸ்வாசியான இவர், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், மாநிலங்களவை எம்.பி ஆனார்.

தற்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வகித்து வருகிறார். எனவே கட்சியின் மூத்த உறுப்பினரான தனக்கே மத்திய அமைச்சர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். மற்றொரு புறம் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின் படி ஒரு மாநிலங்களவை சீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

அவ்வாறு சீட் கிடைக்கும் பட்சத்தில், பாஜக தலைமையிடம் பேசி எப்படியும் அமைச்சர் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் அன்புமணி இருக்கிறார். ஆனால் இவர் மீது பாஜக தலைமைக்கு தேர்தலுக்கு முந்தைய சில நடவடிக்கைகளால் கடுப்பில் இருந்து வருகிறது.

நாளை மோடி தலைமையிலான அரசு பதவியேற்க உள்ளது. அப்போது, யார், யாருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் எனத் தெரியவரும். இதுதொடர்பாக மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் போதிய பலமின்றி காணப்படும் பாஜக, அதிமுகவிற்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்று கருதுகிறது.

எனவே அதிமுகவிற்கு இரு அமைச்சர் பதவி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வாய்ப்பு வைத்தியலிங்கம் மற்றும் ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவியும், மற்றொருவருக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி