ஆப்நகரம்

வாக்களிக்கும் போது இப்படியா பண்றது? அரக்கோணத்தில் பாமகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு!

அரக்கோணம் அருகே வாக்களிக்கும் போது பாமகவினரின் செயலால், பலரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 19 Apr 2019, 4:56 pm
தமிழகத்தில் நேற்று 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதில் அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தியும் போட்டியிட்டனர்.
Samayam Tamil Arakkonam Firing


இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவின் போது, ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்விசாரம் பகுதியில் இந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவை காண, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக மூத்த தலைவருமான வேலு, முன்னாள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் உள்ளிட்டோர் காரில் வந்தனர்.

அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீ வெளியே கார் இருக்க வேண்டும் என்று கூறினார். இதனால் பாமக தொண்டர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அதிக அளவில் தொண்டர்கள் கூடினர்.

அவர்களை கலைக்க சி.ஆர்.பி.எப் துணை ராணுவ வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் தொண்டர்கள் பயந்து ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், பூத்தை கைப்பற்ற வாய்ப்பிருந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் முன்னாள் மத்திய அமைச்சர் வேலு உட்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி கட்சி அடையாளங்களுடன் வந்தது, கூட்டம் சேர்ந்தது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி