ஆப்நகரம்

இப்போ அதிமுகவிலும் வாரிசு அரசியல்! தேனியில் களம் காணும் ஓபிஎஸ் மகன்!

வரும் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் அவரது மகனை களமிறங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Mar 2019, 5:16 pm
வரும் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் அவரது மகனை களமிறங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil OP


வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கயிருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், திமுகவைப் போன்று தற்போது அதிமுகவிலும் வாரிசு அரசியல் தலை தூக்கியுள்ளது. அதிமுகவில் மூத்த அரசியல் பிரபலங்கள் இருந்தாலும், அவர்களையெல்லாம் ஒரு பொருட்டாவே நினைக்காத துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேனி தொகுதியில் தனது மகன் ரவீந்திரநாத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவின் கதிர்காமு வெற்றி பெற்றார். ஆனால், தற்போது கதிர்காமு டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து தேனி மக்களவை தொகுதி மட்டுமில்லாமல், ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நம்பிக்கையுள்ள வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். அது எதுக்கு வேறு ஒருவரை களமிறக்க வேண்டும்? அதற்கு தனது மகனையே நிறுத்தினால் என்ன என்று கருதிய அவர், தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தை முன்னிறுத்தியுள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஆனால், தேனி தொகுதியில், ஓபிஎஸ்சை எதிர்த்து அமமுக கட்சியில் கதிர்காமுவை நிறுத்துவதற்குப் பதிலாக கட்சியின் கொள்கை பரப்பிச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை முன்னிறுத்த முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது வரை ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி வந்தவர், அண்மையில், எம்.எல்.ஏவா? இல்லை எம்பிக்கு நிற்பேனா என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தேனி தொகுதியில் போட்டியிடுகிறது என்பதால், திமுக மட்டுமில்லாமல், அமமுக கட்சியையும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தற்போது எந்தவொரு நிகழ்ச்சியையும் அதிமுகவின் விட்டுவைப்பதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை அமைப்புகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வீட்டு விஷேசங்கள், காதணி விழா, குடும்ப விழா, கோயில் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இதனால், கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல், சாதாரண பொதுமக்களும் தங்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனராம். இதனால், எங்கு பார்த்தாலும் அதிமுக கட்சி தொண்டர்கள் தான் அதிகளவில் காணப்படுகின்றனராம். இதனையே அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனராம்.

அடுத்த செய்தி