ஆப்நகரம்

TN Assembly By Elections: 18 தொகுதிகளோடு 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கும் ஒன்றாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Mar 2019, 10:59 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, மக்களவை தேர்தல் உடன், 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Samayam Tamil DMK1


இந்நிலையில் நேற்று திமுக சார்பில் சென்னை கலைஞர் அரங்கில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 3 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமாக தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. வழக்கு இருந்தால் தேர்தல் நடத்தக் கூடாது என்பது மரபல்ல. தடை உத்தரவு எதுவும் பிறப்பக்கப்படவில்லை.

எனவே இது உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க, நீண்ட காலமாக தேர்தல் தள்ளி போடப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் 21 தொகுதிகளுக்கும் ஒன்றாக, மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி