ஆப்நகரம்

கடைந்து எடுத்த அயோக்கிய அரசியல்வாதி எச்.ராஜா – ஸ்டாலின் ஆவேசம்

எச்.ராஜா ஒரு கடைந்து எடுக்கப்பட்ட அயோக்கிய அரசியல்வாதி. அவரைப்போன்ற ஒரு அயோக்கிய அரசியல்வாதியை இந்தியா முழுவதும் தேடிப்பாா்த்தாலும் நாம் கண்டுபிடிக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளாா்.

Samayam Tamil 30 Mar 2019, 12:26 am
எச்.ராஜா ஒரு கடைந்து எடுக்கப்பட்ட அயோக்கிய அரசியல்வாதி. அவரைப்போன்ற ஒரு அயோக்கிய அரசியல்வாதியை இந்தியா முழுவதும் தேடிப்பாா்த்தாலும் நாம் கண்டுபிடிக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளாா்.
Samayam Tamil Mk Stalin 1200


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தையும், மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், "வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரம் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள எச்.ராஜாவை எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்க முடியாது.

தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்குத் தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பது தான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

பாஜகவில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன். அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம். அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் எச்.ராஜா.

இப்படிப்பட்ட ஒருவர் மக்களவைக்குச் சென்றால், அது மக்களவைக்கே அவமானம். மக்களவைக்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள்? இவர் எந்தத் தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார்? என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம்” என்று பேசினாா்.

அடுத்த செய்தி