ஆப்நகரம்

Tiruvarur Constituency: திருவாரூரில் திமுக தேறுமா? - இறுதி நிலவரம் இதுதான்!

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 16 Apr 2019, 5:07 pm
திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. ஏனெனில் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு, 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதையடுத்து, 2016 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி மீண்டும் போட்டியிட்டு, 68,000 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றார்.
Samayam Tamil Tiruvarur Kalaivanan


அவரது மறைவிற்கு பின், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் பூண்டி கே.கலைவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆர்.ஜீவானந்தம், அமமுக சார்பில் எஸ்.காமராஜ், மக்கள் நீதி மய்யம் சார்பில் அருண் கே.சிதம்பரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மற்ற தொகுதிகளை விட, திருவாரூர் தொகுதி திமுகவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

கருணாநிதியின் கோட்டையை தன்வசப்படுத்த திமுக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வலுவான ஆதரவு இருக்கிறது. மேலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பிரச்சனைகளால் மக்களின் மனநிலை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உள்ளது.

இவை அனைத்தும் திமுக வெற்றி பெற சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம், திருவாரூர் தொகுதியில் பிரபலமானவர். இவர் சார்ந்த சோழிய வெள்ளாளர் சமூகத்தினர் அதிகளவில், அந்த தொகுதியில் இருக்கின்றனர். எனவே இவருக்கும் கணிசமான வாக்குகள் விழ வாய்ப்புண்டு. அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தவர்.

எனவே இவருக்கும் தொகுதியில் பரிச்சயம் உண்டு. ஆகையால் அதிமுகவின் வாக்குகளை இவர் பிரிப்பார் என்று கூறப்படுகிறது. இது திமுகவிற்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இயற்கை விவசாயி அருண் சிதம்பரம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.

எனவே இவருக்கு புதிய தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுகவிற்கு விழும் வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக திருவாரூர் சட்டமன்ற தொகுதி பூண்டி கே.கலைவாணனுக்கு சவால் நிறைந்த களமாகவே இருக்கிறது.

அடுத்த செய்தி