ஆப்நகரம்

புத்திசாலி அரசுகள் ரகசியம் காக்கும்; பாஜக அரசு செய்தது துரோகம் - ப.சிதம்பரம் கடும் தாக்கு!

மிஷன் சக்தி விவகாரத்தில் பாஜக அரசு மீது, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2019, 8:14 am
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில் திடீரென புதிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். அதாவது, மிஷன் சக்தி என்ற பெயரில் இந்திய அரசு விண்வெளியில் புதிய சாதனையை நிகழ்த்தியதாக கூறினார்.
Samayam Tamil Chidambaram


விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தி, அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இதில் முழுவதுமாக இந்திய தொழில்நுட்பம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெறும் என்று மோடி கூறினார்.

தேர்தல் சமயத்தில் இதுபோன்ற அறிவிப்பை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. விண்வெளி சாதனைகள் குறித்த அறிவிப்பை, இஸ்ரோ அதிகாரிகள் தான் அறிவிப்பது வழக்கம் என குற்றம்சாட்டின. ஆனால் மோடி பேச்சு எந்தவித விதிமீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏனெனில் மோடி தனது உரையில் கட்சியின் பெயரையோ, தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றோ கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நம்மிடம் உள்ளது. இதனை முந்தைய புத்திசாலி அரசுகள் ரகசியம் காத்து வந்தன.

ஆனால் பாஜக அரசு ரகசியத்தை வெளியிட்டது துரோகம். குறிப்பாக தேர்தல் நேரத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோற்றுவிடுவோம் என்ற பயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி