ஆப்நகரம்

இதுதாங்க கனிமொழியின் சொத்து விவரங்கள் - தமிழிசை சொத்து இவ்வளவு தான்!

வரும் மக்களவை தேர்தலை ஒட்டி, தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனு மூலம் கனிமொழி மற்றும் தமிழிசையின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 10:33 am
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் முக்கிய புள்ளிகளாக போட்டியிடுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. நீண்ட இழுபறிக்கு பின், இருவரது வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
Samayam Tamil KanimozhiTamilisai750_0


தமிழிசை சொத்து விவரங்கள்:

வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள படி, தமிழிசைக்கு ரூ.2 கோடி சொத்தும், கணவர் சவுந்திரராஜனுக்கு ரூ.8.91 கோடி சொத்தும் இருக்கிறது. மருத்துவராக தொழில் செய்து வரும் தமிழிசைக்கு, 2018-19 நிதியாண்டின் படி ரூ.9,33,550 வருமானம் பெற்று வருகிறார். முன்னதாக 2014-15 நிதியாண்டில் ரூ.2,62,200 வருமானம் பெற்று வந்துள்ளார். இதன்மூலம் 256% அளவிற்கு வருமானம் உயர்ந்துள்ளது தெரிகிறது.

தமிழிசைக்கு அசையும் சொத்துகள் ரூ.1.50 கோடி மதிப்பில் இருக்கின்றன. அதில் 200 சவரன் நகை, டயக்னாஸ்டிக் லேப், ஸ்கேன் மெஷின் உள்ளிட்டவை அடங்கும். தனது பெயரில் எந்தவொரு காரையும் பதிவு செய்திருக்கவில்லை. தமிழிசை கணவர் பெயரில் ரூ.25 லட்சம் மதிப்பிலான டோயோடா பார்ச்சுனர் உட்பட 3 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் மணலியில், தமிழிசைக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் குடியிருப்பு ஒன்று உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.1.87 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மீது எந்தவொரு கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. கல்வித்தகுதியைப் பொறுத்தவரை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ் முடித்துள்ளார். எஸ்.ஆர்.எம்.சி பல்கலைக்கழகத்தில் டிஜிஓ பயின்றுள்ளார்.

கனிமொழி சொத்து விவரங்கள்:

கனிமொழிக்கு ரூ.30 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து இருமுறை மாநிலங்களவை எம்.பியாக இருந்துள்ளார். மக்களவை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார். இவருக்கு ரூ.21.16 கோடி அசையும் சொத்துகள் இருக்கின்றன. அசையா சொத்துகள் ரூ.8.92 கோடி உள்ளது. இவரது கணவர் கே.அரவிந்தன் பெயரில் ரூ.14 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருக்கின்றன. இவர்களது மகன் ஆதித்யன் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.11.12 லட்சம் உள்ளது.

மேலும் ரூ.8.92 கோடி மதிப்பில் இரண்டு 4 சக்கர வாகனங்கள் இருக்கின்றன. அதேசமயம் ரூ.8.92 கோடிக்கு கடன் பாக்கி உள்ளது. 2017-18 நிதியாண்டைப் பொறுத்தவரை, இவரது வருமானம் ரூ.1,40,29,910 ஆகும். முன்னதாக 2013-14 நிதியாண்டில் ரூ.1,24,11,320ஆக இருந்துள்ளது. தனது பணியை பொதுச் சேவை என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் இரண்டு வழக்குகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்புடையவை. கடந்த டிசம்பர் 2017ல் சிறப்பு நீதிமன்றம் மூலம் 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது.

அடுத்த செய்தி