ஆப்நகரம்

முதல்வர் பழனிசாமி பிரச்சார நிகழ்வில் அதிர்ச்சி; 50 பேரை மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு!

முதல்வர் பழனிசாமி பிரச்சார நிகழ்வில் மின்சாரம் தாக்கி 50 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Mar 2019, 8:58 am
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil Palaniswami


இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதாவது, வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கஸ்பா மூர்த்தி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்காக பேருந்து நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் கலைநிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அதன் அருகே பச்சை தைல மரக்கம்புகளில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால், பலரும் அங்கிருந்த கம்பத்தைப் பிடித்தனர். இதற்கிடையில் கம்பத்தின் மேலே செல்லும் மின் ஒயர்கள் உரசியதில் 50க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர்.

பலரும் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக மின்சாரம் சரிசெய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

அடுத்த செய்தி