ஆப்நகரம்

பிரச்சாரத்திற்கு டோக்கன் வழங்கிய ஆளுங்கட்சி? பணம் வராததால் வீடுபுகுந்து அடித்து உதைத்த மக்கள்!

அதிமுகவின் பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு, உரிய பணம் போய் சேராததால், வீடுபுகுந்து அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 27 Mar 2019, 11:34 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன.
Samayam Tamil CM Campaign


அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி, வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கஸ்பா மூர்த்தி ஆகியோருக்கு ஆதரவாக, கடந்த 23ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையொட்டி பேரணாம்பட்டில் அதிக கூட்டம் சேர்ப்பதற்காக ஆளுக்கு ரூ.200 தருவதாக கூறி, பல்வேறு கிராமங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்டோரை அதிமுகவினர் அழைத்து வந்துள்ளனர். இவர்களுக்கு பேரணாம்பட்டு நகரச் செயலாளர் சீனிவாசன் பெயர் எழுதப்பட்ட ‘சீல்’ போட்ட டோக்கன்கள் அளிக்கப்பட்டன.

முதல்வர் பிரச்சாரம் முடிந்த பிறகு, டோக்கனுக்கு பணம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒருநாள் ஆகியும் பணம் தரவில்லை. அதாவது நகரச் செயலாளர் சீனிவாசன் உட்பட சில அதிமுக நிர்வாகிகள் பணத்தை பங்கு போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பேரணாம்பட்டு, தரைக்காடு பகுதியைச் சேர்ந்த சம்ஷீனா உள்ளிட்ட கிராம மக்கள், அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அப்துல்காதர் மைத்துனர் நியாஸ் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி