ஆப்நகரம்

தேர்தலால் ஒளியூட்டப்படும் தமிழகப் பள்ளி - 17 ஆண்டுகால பிரச்சனைக்கு கிடைத்தது தீர்வு!

விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் காரணமாக, 17 ஆண்டுகால தமிழகப் பள்ளி ஒளியூட்டப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 11:38 am
தேர்தல் வருகிறது என்றால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். பிரச்சாரம் நடைபெறும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது அனைவரும் அறிந்ததே.
Samayam Tamil Kovai School


ஆனால் தேர்தல் வருவதால் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பள்ளி ஒன்று மின்வசதி பெறுகிறது என்றால் நம்ப முடிகிறதா? இல்லை தானே. ஆனால் இது தான் நிஜம். கோவை மாவட்டம் தூமனூர் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 48 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தூமனூர், செம்புக்கரை, காட்டுசாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் போதிய மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லை.

கடந்த 2004ஆம் ஆண்டு, சோலார் பேனல்கள் மூலம் வகுப்பறைகளுக்கு மின்சார வசதியும், போர்வெல் மோட்டாரும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தூமனூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளதாலும், வனப்பகுதிக்கு அருகில் இருப்பதாலும் பருவகாலங்களில் நல்ல மழைப்பொழிவை பெறுகிறது.

இதனால் சோலார் பேனல்கள் போதிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. மழை பெய்யும் சூழலிலும் வெளியே சென்றும் பாடம் நடத்த முடியாத நிலை உண்டாவதாக பள்ளி தலைமையாசிரியர் ஷண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலுக்காக இப்பள்ளி வாக்குச்சாவடியாக மாற்றப்படுகிறது. இதையொட்டி தேர்தல் தொடர்பான பல்வேறு உபகரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்காக பள்ளியில் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி