ஆப்நகரம்

இந்தியாவிலேயே முதல்முயற்சியாக தமிழகத்தில் வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்!

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முதல் முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Apr 2019, 10:05 pm
நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் தங்கியுள்ள நபர்களுக்கு, முதல்முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Mental Health Chennai


கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு 200 ஆண்டுகால பாரம்பரியம் இருக்கிறது. இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் தகுதியான 144 பேர் தேர்வு செய்யப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தக்‌ஷின்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது),45, என்னைப் பொறுத்தவரை விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது நாடும், இளைஞர்களும் நன்மை பெற வேண்டும் என்று கூறினார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து, கடந்த 9 ஆண்டுகளாக ஷிஸோபெரேனியா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மனநல மருத்துவமனையில் இருக்கும் நபர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு தருவது இதுவே முதல்முறையாகும். மேலும் அவர்களில் பலருக்கும் இதுவே முதல்முறை வாக்குப்பதிவு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ருக்மினி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது),55, கூறுகையில், நான் எப்போதும் வேட்பாளர்களை வைத்தே கட்சியை எடை போடுவேன். அவர்கள் தங்களுடைய திட்டங்களை விரிவாக விளக்க வேண்டும். இதன்மூலமே நான் எனது முடிவை எடுப்பேன் என்று தெரிவித்தார். இவர் 3 ஆண்டுகளாக தனது குடும்பத்தை பிரிந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், நான் மூன்றாவது முறையாக வாக்களிக்கிறேன். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்களிப்பது இதுவே முதல்முறை என்றார்.

முன்னதாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தில், அங்குள்ளவர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து வாக்குப்பதிவு வசதிகளை செய்திருந்தன.

இந்த மருத்துவமனை இயக்குநர் பூர்ணா சந்திரிகா கூறுகையில், இந்த நபர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அவர்கள் நினைக்கும் வண்ணம், இந்த நாட்டை மேம்படுத்துவதில் பங்காற்றலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு குறைகளைச் சுட்டிக் காட்டி வாக்களிக்க மறுக்கப்படுகிறது.

இது முற்றிலும் தவறானது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் வாக்களிக்கும் நாளிற்காக காத்துக் கொண்டிருந்தோம். இது பெரிய செய்தியாக இல்லாமல், சாதாரணமாக இருப்பதே நல்லது என்று கூறினார்.

அடுத்த செய்தி