ஆப்நகரம்

ஜெயிக்காமலே எம்.பியான ஓபிஎஸ் மகன்; தேர்தல் அராஜகத்தின் உச்சம்!

குச்சனூர் கோவிலில் வைக்கப்பட்ட கல்வெட்டில், ஓபிஎஸ் மகன் எம்.பி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 May 2019, 8:32 am
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் காசி ஸ்ரீ அன்னபூரணி கோவில் இருக்கிறது. இங்கு நேற்று கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதற்காக பலரும் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில், காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று குறிப்பிட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி பாராளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்குள் தேனி பாராளுமன்ற உறுப்பினராக ரவீந்திரநாத் குமார் பெயர் குறிப்பிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் நடந்திருக்காது. இதற்கு பின்னணியில் அரசு அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி