ஆப்நகரம்

ஓபிஎஸ் மகனுக்கு எதிராக போட்டி; தினகரன் உழைப்பு எங்களை ஜெயிக்க வைக்கும் - தங்கதமிழ்ச்செல்வன்!

விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி எங்கள் வசப்படும் என்று அமமுகவின் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Mar 2019, 10:21 am
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைந்துள்ளன.
Samayam Tamil Thanga Tamil Selvan


அமமுக கட்சி எஸ்.டி.பி.ஐ உடன் இணைந்து மக்களவை மற்றும் இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே 24 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அமமுக அறிவித்தது. இந்நிலையில் 14 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்ச்செல்வனுக்கு, தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்குமார் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதுதொடர்பாக பேசிய தங்கதமிழ்ச்செல்வன், மக்களவை தேர்தலில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. என்னை வாழ்த்தி ஏராளமானோர் போன் செய்து கொண்டிருக்கின்றனர். தேனி தொகுதியில் டிடிவி தினகரனின் உழைப்பு இருக்கிறது.

ஓபிஎஸ் தனது மாவட்டத்திற்கு எவ்வாறு உழைத்தார் என்பது மக்களுக்கு தெரியும். இந்த நிலையில் தான் தன் மகனை நிறுத்துகிறார். நான் மக்களை நம்பி களமிறங்குகிறேன் என்று கூறினார்.

இதேபோல் பெரியகுளம் இடைத்தேர்தலில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கதிர்காமு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் ஜெயக்குமார் ஆகியோருக்கு அமமுக வாய்ப்பளித்துள்ளது.

அடுத்த செய்தி