ஆப்நகரம்

சின்னம் வந்தாச்சு அதிமுக அதிருப்தி வாக்குகள் தினகரனுக்கு தான்: மாறும் களம்

அமமுக-வுக்கு தேர்தல் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரன் தாக்கம் தமிழக சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் எவ்வாறு எதிரொலிக்கும் என்று பார்க்கலாம்.

Samayam Tamil 29 Mar 2019, 1:50 pm
டிடிவி தினகரனுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு தமிழக அரசியல் களத்தின் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. இது அதிமுக-வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Samayam Tamil அதிமுக அதிருப்தி வாக்குகளுக்கு குறிவைக்கும் தினகரன்


குக்கர் சின்னம் வேண்டும் என்கிற தினகரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், அமமுக-வின் 59 வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து இன்று காலை அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை அமமுக வேட்பாளர்கள் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சின்னத்தை வாக்காளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக #GiftBox #GiftPack #பரிசுப்பெட்டி போன்ற ஹேஷ்டேகுகள் இந்தியளவில் டிரெண்டிங் அடித்து வருகின்றன.

தற்போது இது அதிமுக-வினருக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-வின் தற்போதைய தலைமை மீது அக்கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த அதிருப்தியாளர்களின் வாக்கு அமமுக-வுக்கு போகலாம் என்பது அதிமுக-வின் கவலையாக உள்ளது.

இதை யூகத்தை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தான் தினகரன் செயல்பட்டு வருகிறார். அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே எதிர்ப்புகளை தினகரனும் தேர்தல் களத்தில் பயன்படுத்தி வருகிறார்.

தவிர, அதிமுக-வின் அதிருப்தி வாக்குகள் திமுக கூட்டணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதிலும் தினகரன் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது. அதற்கு ஏற்றவாறு தேர்தல் களத்தை பயன்படுத்தி வருகிறார் தினகரன். ஆனால் இந்த கணக்குகளில் அதிமுக மீதான அதிருப்தி வாக்குகளை திமுக கணிசமாக பெறும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த கணக்குகளை உணர்ந்து தான், அதிமுக-வின் கோட்டையாக திகழும் மேற்கு மாவட்டங்களில் பொள்ளாச்சி, சேலத்தில் அக்கட்சியுடன் நேரடியாக களம் காண்கிறது திமுக. ஆனால் சமீபத்திய செயல்பாடுகளின் அடிப்படையில் தினகரனும் இந்த தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெறுவார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

திமுக-வுக்கு பலம் வாய்ந்த வட மற்றும் கிழக்கு மாவட்டங்களில் அதிமுக எதிலும் மோதவில்லை. அவற்றில் கூட்டணிக் கட்சிகளை களமிறக்கியுள்ளது அதிமுக. இதற்கிடையில், மக்களவைத் தேர்தலை விட ஆட்சியை முடிவு செய்யும் 18 தொகுதி சட்டமன்ற தேர்தலில் தான் அதிமுக-வின் முழு கவனம் இருந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி