ஆப்நகரம்

ஈரோடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு!

ஈரோடு கூட்டுறவு சங்கத்தின் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது.

Samayam Tamil 4 Sep 2019, 11:07 am
ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளை நிரப்புவதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Samayam Tamil Erode Cooperative Bank


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கி, நிறுவனங்களில் உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அந்தவகையில், ஈரோடு மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 58 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், கூட்டுறவுப் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்றாற் போல் மாறுபடுகிறது.

OC பிரிவினர் 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். இதே வகுப்பைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் 48 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதே போன்று ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி மட்டுமே
விண்ணப்பிக்கும் முகவரி: http://www.erddrb.in/
விண்ணப்பக்கட்டணம்: 250 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டி.என்.பி.எஸ்.சி.,க்கு பயன்படுத்தும் இனசுழற்சி முறையே கூட்டுறவு வங்கித்தேர்வுக்கும் பின்பற்றப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல், எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் இடம் உள்ளிட்ட விபரங்கள் ஈரோடு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் அதனை அவ்வபோது பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.erddrb.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து செப்டம்பர் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு ஈரோடு கூட்டுறவு வங்கி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:

அடுத்த செய்தி