ஆப்நகரம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 8 Mar 2019, 12:12 pm
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக்குகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் 1,33,569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.
Samayam Tamil High Court


அவர்களில் 2,000க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்த சூழலில் வினாத்தாளில் முறைகேடு செய்து, 196 பேர் தேர்ச்சி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனால் இந்த தேர்வை கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தமிழக அரசின் உத்தரவு சரி தான் என்று தீர்ப்பளித்தார்.

இதே கோரிக்கை தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரிக்கப்பட்டது. அதில், 196 பேர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சியடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இருவேறு தீர்ப்புகளால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சூழலில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பிடி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில், பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது.

முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து, பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதுதொடர்பான நடைமுறைகளை வரும் ஏப்ரல் 30க்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி