ஆப்நகரம்

வேலை கிடைக்காததால், துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் பி.இ பட்டதாரிகள்!

தமிழகத்தில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள், சட்டசபையில் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது.

Samayam Tamil 28 Sep 2019, 7:05 am
இன்ஜினியரிங் முடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தமிழக சட்டசபையில் உள்ள வெறும் 14 துப்புரவு பணிக்கு விண்ணப்பத்துள்ளனர். தற்போது அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
Samayam Tamil TN UnEmployment


தமிழகத்தில் இன்ஜினியரிங், முதுநிலைப்படிப்புகள் முடித்த பட்டதாரிகள்பெரும்பாலானோர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வேலைவாய்ப்பை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக தொழில்நிறுவனங்களும் வேலைக்கு ஆட்கள் எடுப்பதில்லை. மாறாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தான் நடந்து வரும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக வெறும் 14 துப்புரவு பணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இன்ஜினியரிங் மட்டுமில்லாது எம்.டெக், எம்.சி.ஏ போன்ற உயர்கல்வி படித்தவர்களும் இதில் அடக்கம்.

சட்டசபை வளாகத்தில் துப்புரவு பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 14 துப்புரவு பணி காலியிடங்களாக இருந்தது. இதற்கு 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பித்தனர். இதில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பி.இ, எம்.சி.ஏ., எம்.டெக் போன்ற படிப்புகள் முடித்தவர்களிடம் இருந்து வந்துள்ளது.

விண்ணப்பங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் தகுதியில்லாத 677 பேரின் விண்ணப்பத்தை நிராகரித்தனர். மற்ற 3,930 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்காக விண்ணப்பதாரர்கள் தமிழக சட்டசபை வளாகத்துக்கு அழைக்கப்பட்டனர்.

சட்டசபை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் வெளிநாடு சென்றுள்ளனர். இதனால், துப்புரவு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை துணை செயலர்கள் மேற்கொண்டனர். தினமும் 100 பேர் என சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்குப் பின், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் துப்புரவு பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

துப்புரவு என்பது நல்லதொரு பணி தான் என்றாலும், அதற்கு எம்.டெக் வரையில் படித்து முடித்தவர்கள் விண்ணப்பத்தது தான் கேள்விக்குறியாகியுள்ளது. அதுவும் வெறும் 14 காலியிடங்களே அறிவிக்கப்பட்டன. இவ்வாறு அதிக படிப்பு முடித்தவர்கள், குறைந்த கல்வி தகுதி கொண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் போது, அதற்கென தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையே மீண்டும் உருவாகும்.

அடுத்த செய்தி