ஆப்நகரம்

தான் போட்ட வலையில் தானே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த மீனவர்; சென்னையில் சோகம்!

சென்னை: மீனவர் ஒருவர் தனது வலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 10 Dec 2018, 11:49 am
சென்னையை அடுத்த பழைய நடுக்குப்பத்தைச் சேர்ந்த சூர்யா, தனது உறவினர்கள் பெருமாள் மற்றும் பத்மநாபன் உடன், கடந்த சனிக்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். மூவரும் கடலில் வலையை விரித்துள்ளனர். அப்போது கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டது.
Samayam Tamil Fishermen


அலைகள் தாறுமாறாக மேலெழுப்பிக் கொண்டிருந்தன. இந்த சூழலில் படகின் ஒரு முனையில் நின்றிருந்த சூர்யா நிலை கொள்ள முடியாமல் தவறி விழுந்துள்ளார். தான் விரித்த வலையிலேயே சூர்யா சிக்கியுள்ளார். பின்னர் வலையில் இருந்து விடுபட முயற்சித்துள்ளார்.

ஆனால் மேலும் சிக்கலாக மாட்டிக் கொண்டார். பெருமாளும், பத்மநாபனும் சேர்ந்து சூர்யாவை படகிற்குள் இழுக்கப் போராடினர். ஆனால் முடியாததால், கரைக்கு படகை கொண்டு செல்ல திட்டமிட்டனர். சூர்யா 30 நிமிடங்கள் வரை கடுமையாக போராடியுள்ளார்.

மற்ற இருவரிடமும் கத்தி இல்லாததால், வலையை அறுத்து விட முடியவில்லை. அதேசமயம் கைகளால் அறுக்க முடியாத அளவு நைலான் வலை மிகவும் கடினமாக இருந்துள்ளது. இறுதியில் இருவரின் போராட்டமும் துயரத்தில் முடிந்துள்ளது.

சூர்யாவின் கழுத்தைச் சுற்றி வலை மாட்டிக் கொண்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். கரைக்கு வந்தவுடன் வலையை அறுத்துள்ளனர். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துள்ளது. அதன்பிறகு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்கு சூர்யாவின் உடல் ஒத்துழைக்கவில்லை.

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சூர்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதன்பிறகு சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சூர்யா குறித்து போலீசார் கூறுகையில், அவர் ஒரு சிறந்த நீச்சல்காரர். கடல் அவருக்கு நன்கு பழக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஏராளமான மீன்களுடன் கரைக்கு திரும்புவார் என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி