ஆப்நகரம்

எப்படி இருக்கிறது சென்னை மெட்ரோ? - முதல் பயணமே இப்படியொரு அசத்தல்!

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 7 Sep 2020, 11:31 am
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதில் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் அடங்கும். இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கு பிறகு நான்காம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று காலை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. சென்னை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வாஷர்மென்பேட்டை வரையிலான முதல் ரயிலில் தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பயணித்தார்.
Samayam Tamil Chennai Metro


வழக்கமாக அலுவலகம் செல்லும் பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தினர். இதையொட்டி திருமங்கலம், ஷெனாய் நகர், ஆலந்தூரில் ஏராளமானோர் காத்திருந்தனர். வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில் அலுவலகம் செல்லும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலை 7 மணி முதல் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பிஸியான நேரங்களில் மணிக்கு ஒருமுறையும், மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தொடர்பற்ற டிக்கெட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்மார்ட் கார்டுகளும், கியூ.ஆர் கோட் ஸ்கேன் செய்யும் டிக்கெட் சேவையும், ஆன்லைன் வாயிலான பணப்பரிமாற்ற முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் எப்படி பயணிக்க வேண்டும்? பயணசீட்டு வழிமுறைகள் மாற்றம்...

இதனால் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. டிக்கெட் பெறும் இயந்திரத்தின் முன்பு நின்று விரைவில் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் பயணிகளின் நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்குள் நுழையும் போது பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.

மேலும் சானிடைசர்களும் வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில்கள் முழுவதுமாக மூடப்பட்டு குளிர்சாதன வசதியுடன் இயங்கும். இதேபோல் ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். இந்த சூழலில் புத்துணர்ச்சி மிக்க காற்றை பெறும் வகையில் குறிப்பிட்ட வெப்பநிலையில் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி