ஆப்நகரம்

கரணம் தப்பினால் மரணம்: சென்னை அருகே உடைந்த பாலத்தில் ஆபத்தான பயணம்!

சென்னை அருகே செய்யாறு வெள்ளத்தில் உடைந்துபோன பாலத்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கிராம மக்கள் கடந்து செல்லும் சம்பவம் பார்ப்பவர்களை கலக்கம் அடையச் செய்கிறது.

Samayam Tamil 6 Dec 2021, 7:05 pm
சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் செய்யாறு வெள்ளத்தில் 80 சதவீதம் உடைந்துபோன பாலத்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கிராம மக்கள் கடந்து செல்கிறார்கள்.
Samayam Tamil கரணம் தப்பினால் மரணம்: சென்னை அருகே உடைந்த பாலத்தில் ஆபத்தான பயணம்!


30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் - வெங்கச்சேரி இடையே கட்டப்பட்ட செய்யாற்று தரைப்பாலம் கனமழை வெள்ளத்தால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆற்றில் தண்ணீர் குறைந்ததும், மீண்டும் போக்குவரத்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் அங்குள்ள தரைப்பாலம் 80 சதவீதத்திற்கு மேலாக சுக்குநூறாக உடைந்தது. மக்கள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வெங்கச்சேரி, கடம்பர்கோவில், காவாம்பயிர், கருவேப்பம்பூண்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் 35 கிமீ சுற்றி, மானாம்பதி வழியாக காஞ்சிபுரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செய்யாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாலம் பாதிப்படைந்தது. அப்போதே புது பாலம் கட்டியிருந்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்காது. 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் கடைக்காரர்கள், மளிகை சாமான்கள், காய்கறிகள் என வாங்க, காஞ்சிபுரம் செல்ல வேண்டும். மேலும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இந்த பகுதிக்கு வருவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை கடந்து கல்லூரி மாணவர்களும், கிராம பொதுமக்களும், வயதானவர்களும் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து வருகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலையில் கைக்குழந்தையுடன் உடைந்துபோன பாலத்தின் மேல் ஏறி அக்கரையில் இருந்து இக்கரை வருகிறார்கள்.

தமிழகத்தில் குறையும் கொரோனா - அதிகரிக்கும் உயிரிழப்பு!
கிராம மக்களை தடுத்து நிறுத்த காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை எனவும் எந்த ஒரு போலீசாரும் இப்பகுதியில் பாதுகாப்பிற்கு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படிபட்ட சூழலில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு இப்பகுதியில் பொது மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து இடிந்து கிடக்கும் இந்த ஆபத்தான பாலத்தை முழுமையாக இடித்து, புதிய பாலத்தை சற்று உயர்வாக கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி செய்தால் மட்டுமே வருங்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரை தொடர்புகொண்டு கேட்கும் போது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் உடனடியாக போலீசார் பணியில் அமர்த்தி பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் வராத வண்ணம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி