ஆப்நகரம்

குடிநீர் இல்லாத பள்ளிகளுக்கு இப்படியொரு அட்டகாசமான ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்!

குடிநீர் இல்லாத பள்ளிகள் பற்றி தெரிவித்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2019, 6:37 pm
தமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Samayam Tamil Water-tankersjpg


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எனவே சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர் பிரச்னை இருந்தால், உடனே தகவல் தெரிவிக்கலாம்.

அந்த பள்ளிகளுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும். பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும்.

இதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார். முன்னதாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணவர்களை வீட்டிலிருந்தே குடிநீரைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே புத்தக மூட்டையை சுமந்து செல்லும் மாணவர்கள், தண்ணீர் பாட்டில்களை சுமந்து செல்வது பெரும் சுமையாக இருக்கும் என்று பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி