ஆப்நகரம்

காஞ்சிபுரத்தில் வெளுத்து வாங்கும் மழை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Nov 2021, 6:12 pm
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை இடைவிடாது பெய்து வருகிறது.
Samayam Tamil tamil nadu rain holiday


காஞ்சிபுரம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரத்தில் 47 மில்லிமீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 24 மில்லிமீட்டர் மழையும், செம்பரபாக்கம் குன்றத்தூர் பகுதிகளில் தலா 65 மில்லிமீட்டர் மழை, உத்திரமேரூர் 30 மில்லி மீட்டரும் வாலாஜாபாத்தில் 15செண்டி மீட்டரும் என காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 175 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

இதனால் பிரதானமான முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதி களான மின்நகர், திருக்காளிமேடு தாழ்வான இடங்களில் மக்கள் வெளி வராத அளவுக்கு மழை நீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 874 ஏரிகள் முழு கொள்ளளவையும், 35 ஏரிகள் 75 விழுக்காடு நீர் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நாளை (நவம்பர் 29) மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி