ஆப்நகரம்

சென்னையை கதிகலங்க வைத்த செல்போன் பறிப்பு; 50 இடங்களில் கைவரிசை காட்டிய பாடகர் கைது!

சென்னை: செல்போன் பறிப்பு சம்பவங்களில் கரோகி பாடகர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 7 Dec 2018, 6:01 pm
சென்னையின் தி.நகர், தேனாம்பேட்டை, பாண்டிபசார், மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தி.நகர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
Samayam Tamil Cellphone snatching


சிசிடிவி கேமரா, செல்போன் ஐ.எம்.இ.ஐ எண், செல்போன் எண்கள் ஆகியவற்றை வைத்து டிராக் செய்தனர். இதன்மூலம் வழிப்பறி செய்த நபர் ஆக்டிவா இருசக்கர வாகனம் பயன்படுத்தியது தெரியவந்தது.

அவரது செல்போன் எண்ணைக் கைப்பற்றி டிராக் செய்தனர். இதற்கிடையில் அந்த நபர் வேறொரு வாகனத்தின் மூலம் குற்றச்செயலில் ஈடுபடத் தொடங்கினார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டினர். இந்நிலையில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர், தனது காதலியைப் பார்க்க வந்த போது போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மடிப்பாக்கம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த அசார் அலி(28) என்று தெரியவந்தது. அவர் தி.நகர் சத்தியா பசாரில் செல்போன் கடை வைத்திருந்தார். அங்கு திருடி கொண்டு வரப்படும் செல்போன்களை வாங்கி, மீண்டும் விற்றுள்ளார்.

அப்போது கிண்டி போலீசில் மாட்டிக் கொண்டதால், கடையை மூடும் நிலை ஏற்பட்டது. பின்னர் வருமானத்திற்காக கிளப், பப்களில் கரோகி பாடகராக மாறினார். ஆனால் வருமானம் போதவில்லை. அதன்பிறகு செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. திருடிய செல்போன்களை பர்மா பசார், ஓ.எல்.எக்ஸ் போன்றவற்றில் விற்றுள்ளார். தனது வருமானத்தில் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அசார் அலியிடம் இருந்து 15 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய அவரது நண்பர் விக்கியை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி