ஆப்நகரம்

இத்தனை கோடி போதை பொருளா?; சர்வதேச கடத்தல் கும்பல் சிக்கியது!

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் சா்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சோ்ந்தவா்களா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 8 May 2021, 9:12 am
கத்தாா் தலைநகா் தோகாவில் இருந்து பயணிகள் விமானம் நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த 113 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர்.
Samayam Tamil கைதானவர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்
கைதானவர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்


அப்போது தென்னாப்ரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு வந்த தான்சானியா நாட்டை சேர்ந்த டிபோரா (45) மற்றும் அவருடன் வந்த பெண் பிலீக்ஸ் ஒபடியா (40) ஆகியோர் மீதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் நிறுத்தி சுங்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் இருவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு: அரசு அதிரடி அறிவிப்பு!

பெங்களூரு செல்வதற்கு டிக்கெட் கிடைக்காததால் சென்னை வந்து, உள்நாட்டு விமானத்தில் மீண்டும் இருவரும் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறினர். ஆனாலும் அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை.

எனவே அவர்களிடம் இருந்த சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சூட்கேசின் அடிப்பகுதியில் ரகசிய அறை அமைத்து, ரூ.100 கோடி மதிக்கத்தக்க 15 கிலோ ஹெராயின் போதை பவுடர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சா்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சோ்ந்தவா்களா? என அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி